புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 10-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் மீண்டும் சட்டப் பேரவை கூடுகிறது. வரும் 22-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2022-23 ஆண்டிற்காக ரூ 10,700 கோடி மதிப்பில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ சி.ஜெயக்குமார், சந்திர.பிரியங்கா, சாய்.சரவணகுமார், தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா மற்றும் அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், வரும் 22-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் இறுதி செய்ய வேண்டியவைகளான அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட உள்ள நிதி நிலவரம், துறைகளுக்குரிய திட்டங்களை இறுதி செய்வது ஆகியன குறித்தும், புதிய திட்டங்கள் அறிவிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.