Skip to main content

அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த புதுச்சேரி பாஜக

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Puducherry BJP shocks AIADMK

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதேநேரம் புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தலுக்கான தீவிரப் பணிகளை கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன, இந்நிலையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், ''இந்த தேர்தலில் நாங்கள் சொல்லி இருக்கிறோம். நம்முடைய புதுச்சேரியினுடைய பாராளுமன்ற இடம் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட ஒன்று. வேட்பாளர்களை அவர்கள் அறிவிப்பார்கள்.  தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி புதுச்சேரி வருவார்'' எனவும் தெரிவித்தார்.

Puducherry BJP shocks AIADMK

அண்மையில் தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி அதிமுகவின் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை புகழ்ந்து பேசி இருந்தார். இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இது மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணிக்கான அடித்தளம் என்றும் பேசப்படட்டது. புதுச்சேரியில் பாஜகவிற்கு வாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி ஏற்படுத்தி 6 சட்டமன்ற உறுப்பினர்களை பெற முடிந்தது.

தற்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. இதனால் பாஜகவிற்கு வாக்குகள் குறைந்துவிடும் என்ற நிலையில் அதிமுகவின் முன்னாள் தலைவர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோர் புகைப்படங்களை வைத்து புதுச்சேரியில் பாஜக வாக்குகளை கேட்டு வருகிறது. அக்கட்சியின் நமச்சிவாயத்தை எம்ஜிஆர் போல் சித்தரித்து சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரையில் பாஜக ஈடுபட்டிருப்பது அதிமுகவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

சார்ந்த செய்திகள்