Skip to main content

3 வருடத்திற்கு ஆடல் பாடலை நிறுத்துவோம்.. நீர்நிலைகளை உயர்த்துவோம்.. தீர்மானம் போட்ட கிராம மக்கள்...

Published on 04/08/2019 | Edited on 04/08/2019

3 ஆண்டுகளுக்கு திருவிழாக்களில்ஆடல் பாடலுக்கு செய்யும் செலவை நிறுத்தி, அதற்கு பதிலாக கிராமத்தில் உள்ள நீர்நிலைகள், பள்ளி, கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்துவது  என்று தஞ்சை மாவட்டம் நாடியம் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்றி இருகின்றனர். கிராம மக்களின் இந்த முடிவு பலரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல் எந்த சூழ்நிலையிலும் டாஸ்மாக்கை ஊருக்குள் நுழையவிடமாட்டோம் என்பதையும் அழுத்தமான தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறார்கள் கிராம மக்கள்.

 

pudhukottai nadiyam village

 

 

'கிராமங்களின் வளர்ச்சி இளைஞர்களின் கையில்' என்பதை சமீபகாலமாக டெல்டா மாவட்ட இளைஞர்கள் நிருபித்து வருகிறார்கள். நிலத்தடி நீர் கீழே போகிறது மணல் திருட்டை தடுங்கள், நீர்நிலைகளை பலப்படுத்துங்கள் என்று கிராம மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். போராட்டங்களை நடத்தினார்கள், ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. குடிக்க தண்ணீர் இல்லை என்று காலிக்குடங்களுடன் சாலைக்கு வந்தார்கள். அதிகாரிகள் வந்து சமாதானம் செய்தார்கள். எல்லா வகையிலும் கேட்டாச்சு இனி எதையும் எதிர்பார்க்க முடியாது என்ற நிலையில், படிக்கவும், படித்துவிட்டு வேலைக்காகவும் வெளியூர், வெளிநாடுகள் என்று சென்ற இளைஞர்கள் சொந்த ஊரை திரும்பிப் பார்க்கத் தொடங்கினார்கள். இப்பவே தண்ணீர் இல்லை என்றால் இன்னும் சில வருடங்களில் முற்றிலும் வற்றிப் போகும். அதனால் நமக்கு நாமே நல்லதை செய்து கொள்வோம் என்று தஞ்சாவூர் மாவட்டம் களத்தூரில் களமிறங்கிளார்கள். இளைஞர்கள் கையிலிருந்து ரூ. 59 லட்சத்தை செலவு செய்து நீர்நிலைகளை சீரமைத்தார்கள், வரத்து வாய்க்கால்களை வெட்டி சீர்செய்தார்கள். அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல் கிராமத்தில் 30 வருடங்களுக்கு முன்பு இருந்து காணாமல் போன பாசன வாய்க்காலை கண்டுபிடித்து 5 கி.மீ வெட்டி சீர்செய்தார்கள். வாய்க்கால் வெட்டி முடிக்கும் போது ஆற்றில் தண்ணீர் நின்று போனது. கீரமங்கலத்தில் காட்டாற்றில் மண்ணால் தடுப்பணை கட்டி குளத்திற்கு தண்ணீரை கொண்டு சென்றார்கள். இவை புயல் நேரத்தில் விவசாயிகளுக்கு  பயிர்களை காக்க கை கொடுத்தது. இப்படி தொடங்கிய பணிகள் அடுத்தடுத்து சேந்தன்குடி, கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு என்று பல கிராமங்களின் இளைஞர்களையும் ஈர்த்தது. சொந்த செலவில் குளம், எரி, வாய்க்கால் என்று சீரமைப்பு பணிகளில் தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில் தான் தஞ்சை மாவட்டம் நாடியம் கிராமத்தின் வளர்ச்சியை மீட்டுக்க வேண்டும் என்று இளைஞர்கள் முடிவெடுத்தனர். பல ஊர்களிலும் பல்வேறு வேலையாக இருந்தவர்களை தகவல் கொடுத்து அழைத்தனர். 

ஆகஸ்ட் 3 ந் தேதி வெள்ளிக் கிழமை நமது கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் அனைவரும் கூட வேண்டும் என்றார்கள். அதன்படி வெளியூர்களில் இருந்தவர்கள் அத்தனை பேரும் கூடினார்கள். அவர்களில் ஒருவராக அந்த கிராமத்தைச் சேர்ந்தவரும் கடலூர் மாவட்ட ஆட்சியருமாக அன்புச்செல்வனும் இளைஞர்களின் அழைப்பை ஏற்று வந்திருந்தார். 

கூட்டம் தொடங்கியது.. கிராமத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்வது என்று ஒவ்வொருவராக கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் பலரும் பல கருத்துகளை முன்வைத்தனர். இறுதியாக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

கிராமத்தின் வளர்ச்சிக்காக முதலில் நமக்கு தேவை தண்ணீர். விவசாயத்திற்கும், குடிக்கவும் தண்ணீர் வேண்டும். அதற்காக நம் ஊரில் உள்ள 340 ஏக்கர் மற்றும் 100 ஏக்கர் பரப்பளவுள்ள 2 ஏரிகளையும், 7 குட்டைகளையும் மீட்டு தூர்வாரி தண்ணீரை நிரப்ப வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 

மேலும் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டும். அதற்கு தேவையான கட்டமைப்பு பணிகளை செய்ய வேண்டும் போன்ற கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை 3 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

அதற்கான நிதி ஆதாரமாக, 3 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த ஊரில் 10 நாட்கள் நடக்கும் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு அதற்காண தொகையை நீர்நிலை, பள்ளி, கிராம வளர்ச்சிக்காக செலவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். 

இறுதியாக அத்தனை வளர்ச்சிப் பணிகளையும், இளைஞர்களையும் சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைய நாடியம் ஊராட்சி எல்லைக்குள் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க கூடாது என்று தீர்மானங்களை நிறைவேற்றிய போது கிராம மக்கள் அனைவரும் ஒரே குரலில் சம்மதம் தெரிவித்தனர். 

தீர்மானத்துடன் நின்றுவிடக்கூடாது என்பதால் முதல்கட்டமாக வரும்  சனிக்கிழமை முதல் நீர்நிலை சீரமைப்பு பணிகளை தொடங்க உள்ளனர். 

நாடியம் கிராம இளைஞர்களின் இந்த தீர்மானம் அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவியதால் அவர்களும் கிராம கூட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் பல கிராமங்களில் கிராம கூட்டங்கள் நடக்கும் அரசாங்கம் செய்ய தவறிய பணிகளை இளைஞர்களும், கிராம மக்களும் முன்னெடுத்து செய்வார்கள் என கூறப்படுகிறது.

டெல்டாவில் தொடங்கிய இந்த இளைஞர்களின் எழுட்சி தமிழகம் முழுவதும் பரவி நீர்நிலை சேமிப்பு என்ற புரட்சியை ஏற்படுத்த வேண்டும். அந்த புரட்சி தான் நாளை நம் சந்ததிகளுக்கு தாகம் தணிக்க தண்ணீரை கொடுக்கும், சுயமாக சுவாசிக்க நல்ல காற்றையும் கொடுக்கும்.

 

 

சார்ந்த செய்திகள்