திருச்சி மாநகராட்சியில் வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் 38வது வார்டு காட்டூர் அருந்ததியர் தெருவினைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்.
தேவையான குடிநீர், கழிவறை, மழைநீர், கழிவுநீர் வடிகால் வசதி, சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சியில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் அப்பகுதியில் திரண்டு பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒரு பெட்டியில் போட்டு மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அங்கிருந்தவர்கள் கூறுகையில், “அடிப்படை வசதி செய்து தரும்வரை தொடர்ந்து போராடுவதோடு, தேர்தல்களையும் புறக்கணிப்போம்” என்று தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.