![court1](http://image.nakkheeran.in/cdn/farfuture/1ClY5f4t5AJ7XVips3j61j3K_2YKFy3vzfo5AP_8p5s/1533347644/sites/default/files/inline-images/court1.jpg)
எந்த ஆதாரமும் இல்லாமல் சாதாரண காரணங்களுக்காக பொது நல வழக்குகள் தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை அகற்ற உத்தரவிடக் கோரியும், கடமையை செய்யத் தவறும் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரியும் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, கவர்னர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அளித்த மனுக்களை இணைத்துள்ள மனுதாரர், வேறு எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்தனர்.
மேலும், எந்த சட்டப்பிரிவின் கீழ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடாமலும், அதிகாரிகள் யார் யார் என பெயரை தெரிவிக்காமலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை ஏற்று கொள்ள முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தனர்.
எதிர்காலத்தில் எந்த ஆதாரங்களும் இல்லாமல், சாதாரண காரணங்களுக்காக பொது நல வழக்கு தாக்கல் செய்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.