தனியார் சாராய ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதியளித்துள்ளதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியை அடுத்த லிங்காரெட்டிபாளையத்தில் 20 வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட தனியார் சாராய ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. இந்த ஆலை திறக்கப்பட்டால் நிலத்தடி நீர் மாசுபடும், கால்நடைகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்படையும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறி பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் சாராய ஆலை மீண்டும் இயக்க எதிர்ப்பு தெரிவித்து காட்டேரிகுப்பம், லிங்காரெட்டிபாளையம், சுத்துக்கேணி, ரெங்கநாதபுரம், சந்தைபுதுக்குப்பம், தேத்தபாக்கம், குமாரபாளையம், நாராயணபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக சென்று ஆலையினை முற்றுகையிட வந்தனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாராய ஆலையை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராகவும், ஆலை நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன முழுக்கங்கள் எழுப்பினர். பின்னர் மக்கள் நலன் கருதி அரசு சாராய ஆலையினை இயக்க தடை விதிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என போராட்டக்காரர்கள் எச்சரித்தனர்.
இதேபோல் புதுச்சேரி கருவடிக்குப்பம் சாலையில் கோயில்கள், பள்ளிகள் அருகே அமைந்துள்ள மதுபான கடைகள், சாராயக் கடைகளை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் மற்றும் சோசலிஸ்ட் யூனிடி சென்டர் ஆஃப் இந்தியா அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.