சீர்காழியில் வெள்ளத்தால் பாதித்த பகுதியைப் பார்வையிட வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பெய்த கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை மயிலாடுதுறை மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு வருகின்றனர். தென்னாம்பட்டினம், எடமணல், வழுதலை குடி, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்த அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவதாகக் கூறியிருந்த நிலையில் காலை 9 மணியிலிருந்து விவசாயிகளும், பொதுமக்களும் காத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருமுல்லைவாசல் - சீர்காழி சாலையில் அமர்ந்து வெள்ளத்தில் மூழ்கிப் பாதிப்படைந்த பயிர்களைக் கையில் வைத்துக்கொண்டு மறியலில் ஈடுபட்டனர். "பாதித்த பகுதிகளைப் பாரபட்சம் இல்லாமல் பார்வையிட்டுக் கணக்கெடுப்பு செய்து முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும்" என்கிறார்கள் விவசாயிகள்.