தர்மபுரி அருகே அரசு ஒப்பந்ததாரரிடம் 1500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஜெர்த்தலாவ் ஊராட்சிக்கு உட்பட்ட மணியகாரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன். அரசுப்பணிகளை ஒப்பந்தம் எடுத்துச் செய்து வந்தார். கடந்த 2011ம் ஆண்டு, ஜூன் மாதம் முதல் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து முட்டைகளை எடுத்துச் சென்று ஒன்றியத்திற்குட்பட்ட அரசுப்பள்ளிகள், குழந்தைகள் நல மையங்களுக்கு விநியோகம் செய்யும் ஒப்பந்தப் பணிகளைச் செய்து வந்தார்.
இதையடுத்து கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் முட்டை விநியோகத்திற்கான பயணப்படி தொகையைக் கேட்டு பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலராக (பிடிஓ) பணியாற்றி வந்த நாகராஜன், மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் பயணப்படி பட்டுவாடா செய்யப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் தர விரும்பாத காளியப்பன், இதுகுறித்து தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையில் புகாரளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் ரசாயன பவுடர் தடவப்பட்ட 1500 ரூபாயை காளியப்பனிடம் கொடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.
அதன்படி, ஒப்பந்ததாரர் காளியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜனிடம் 1500 ரூபாயை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் பாய்ந்து சென்று நாகராஜனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, தர்மபுரி மாவட்ட முதன்மைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பிப். 27ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நாகராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். அபராதத்தொகை செலுத்தத் தவறும்பட்சத்தில் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.