Skip to main content

'சென்னை டிடி தொலைக்காட்சி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்'-திமுக அறிவிப்பு

Published on 18/10/2024 | Edited on 18/10/2024
'Demonstration in front of Chennai DD TV' - DMK announcement

சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களையொட்டி கடந்த ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையொட்டி நாளை (18.10.2024) நடைபெறும் இந்த கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்கிறார். டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சம்பவம் பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அழைப்பிதழில், “சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க அனைவரையும் மனமார வரவேற்கிறோம். இடம் : தொலைக்காட்சி நிலைய அரங்கம்-1, 5, சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம். சென்னை-600 005. நாள்: அக்டோபர் 18 (வெள்ளிக்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும். இந்தியா போன்ற பல்வேறு மொழியில் பேசும் நாட்டில் இந்திக்கு தனி இடம் அளிக்க இயலாது. அரசமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை தரவில்லை. தகவல் தொடர்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் மொழிகளையும் மத்திய அரசு கொண்டாட வேண்டும். செம்மொழியாக  அங்கீகரித்துள்ள அனைத்து மொழிகளையும் சிறப்பிக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும். அனைத்து மொழிகளையும் சிறப்பிக்கும் போது சமூகமான உறவை மேம்படுத்த முடியும். இந்தி மாதம் கொண்டாட்டங்களில் நிறைவு விழாவை உடனடியாக நிறுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை டிடி தொலைக்காட்சி அலுவலகம் முன்பு திமுகவின் மாணவரணி சார்பில் இன்று பிற்பகல் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சார்ந்த செய்திகள்