சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் காலா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘நதிகளை இணைத்த பின்னர் என் கண்கள் மூடினால் கூட நான் கவலைகொள்ள மாட்டேன்’ எனப் பேசியிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டநிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘ரஜினியால் ஆட்சியைப் பிடிக்கமுடியாது. அவர் ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம்’ என கருத்து தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து காரைக்குடி நகரத்தார் சமுதாய பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல், காரைக்குடி நகரத்தார் சங்கத்தினரும் அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்தக் கருத்திற்கு கண்டனங்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், நகரத்தார் சமூக பெண்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ-வை கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சனிக்கிழமை நடந்த ஆர்பாட்டத்தில் அங்குள்ள உள்ள செட்டியார் குளத்திற்குள், அந்த சமூக இளைஞர்கள் தெர்மாகோலை விட்டு அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர்.