கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சேத்தியாதோப்பு வீராணம் நீரேற்று நிலையத்தை (சென்னைக்கு குடிநீரேற்றும் நிலையம்) கடலூர் அருகே உள்ள சின்னப்பநாயக்கன் பாளையம் கிராமத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் முற்றுக்கையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்காக தமிழகத்தின் அனைத்து தரப்பு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து இந்த போராட்டத்தின் வாயிலாக மத்திய அரசுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்ப்பதை தவிர்த்தால் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கலாம். அப்படி சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்தால் தற்போது தமிழகத்திற்கு ஏற்பட்ட தண்ணீர் பிரச்சனைக்கும், கெயில், மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களினால் ஏற்படப்போகும் ஆபத்துகளை தடுக்கவும் இயலும் என்று அனைவரையும் கிரிகெட் போட்டியை தவிர்க்க வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
தடையை மீறி சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சென்னை வாழ்மக்கள் நேரில் சென்று பார்த்தனர். இதனால் ஆத்திரமுற்ற கடலூர் அருகே உள்ள சின்னப்பநாயக்கன் பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தமிழகத்தின் உரிமைக்காக போராட மனமில்லாதவர்களுக்கு எங்களின் வாழ்வாதாரத்தை தொலைத்து எதர்க்காக தண்ணீர் கொடுக்க வேண்டும்? எனக்கூறி சேத்தியாதோப்பு பகுதியில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்துசெல்லும் நீரேற்று நிலையத்தை முற்றுக்கையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த ஒரத்தூர் காவல் நிலைய காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்துறையினர் பேச்சுவார்த்தையினால் சமாதானமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.