நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார் அவரைப் பார்ப்பதற்காக அவரின் வழக்கறிஞர் என்ற முறையில் சென்ற ம.தி.மு.க.வின் பொ.செ. வைகோவை போலீசார் அனுமதிக்கவில்லை. அதனைக் கண்டித்த, வைகோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சி.பி.எம். கோபாலகிருஷ்ணன், சி.பி.ஐ. முத்தரசன், வி.சி.கட்சியின் திருமா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் செய்ததோடு அவரை விடுதலை செய்ய வலியுறுத்தினர்.
இதனிடையே நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகர ம.தி.மு.க. செ. ஆறுமுகச்சாமி பொருளாளர் ரங்கநாதன் தலைமையில் நேற்று திரண்ட ம.தி.மு.க.வினர் நகரின் பேருந்து நிலையத்திற்குப் பேரணியாய் வந்தனர். அங்கு சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அதில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோஷமிட்டார்கள். எச்.ராஜாவுக்கு ஒரு சட்டம், நக்கீரன் கோபாலுக்கு ஒரு சட்டமா. விடுதலை செய் விடுதலை செய் நக்கீரன் கோபாலை விடுதலை செய் வைகோவை விடுதலை செய் என கோஷமிட்டனர். அவர்களை சங்கரன்கோவில் போலீசார் கைது செய்தனர்.
அதே போன்று நெல்லை ஜங்ஷன் அண்ணா சிலை முன்பு புறநகர் ம.தி.மு.க. செ. தி.மு. ராஜேந்திரன் தலைமையில் திரண்ட ம.தி.மு.க.வினர் நக்கீரன் ஆசிரியர் கைதைக் கண்டித்துக் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் கோபாலை விடுதலை செய். வைகோவை விடுதலை செய் என்று கோஷங்கள் எழுப்பினர் அவர்களை ஜங்ஷன் போலீசார் கைது செய்தனர்.
அத போல் கோவில்பட்டியில் ம.தி.மு.க. வடக்கு மா.செ. ரமேஷ் தலைமையிலும் நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் வைகோவை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.