பெற்றோரிடம் இருந்து சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்ட மகன்கள் அவர்களுக்கு உணவு அளிக்காமல், வீட்டைவிட்டு வெளியேற்றியதால் அந்த பத்திரப்பதிவை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர், அந்த சொத்துக்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளார். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007ன் கீழ் இந்தியாவிலேயே முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி,
கடந்த 19.06.2018 அன்று கண்ணன் மற்றும் பூங்காவனம் தம்பதியினர் தங்கள் பிள்ளைகள் சரியாக பராமரிக்காமல் துன்புறுத்துவதாகவும், தாங்கள் பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த சொத்தில் ஒரு பகுதியை பெற்று தருமாறும் மனு அளித்தனர்.
இவர்களது மூத்த மகன் பழனி அரசு வேலையில் உள்ளார். இளைய மகன் செல்வம் கட்டுமான பணிகளை செய்து வருகிறார். இந்த தம்பதியினர் பல வருடங்களுக்கு முன்பு தாங்கள் சுயமாக சம்பாதித்த 5 ஏக்கர் சொத்தை இரு மகன்களுக்கும் சமமாக எழுதிக்கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர் இரு மகன்களும் பெற்றோர்களுக்கு உணவு வழங்காமலும், பராமரிக்காமலும் விட்டுவிட்டார்கள். இந்த நிலையில் பெற்றோர் இருவரும் பசியும், பட்டினியுமாக மன உளைச்சலுடன் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். பிள்ளைகளுக்கு 5 ஏக்கர் நிலத்தை எழுதி கொடுத்துவிட்டு தங்களது சாப்பாட்டிற்கே கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இவர்கள் மனுவை பெற்றவுடன் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007ன் கீழ் நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டது. இதில் இளைய மகன் செல்வம் தந்தை கண்ணனை மிகவும் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதனால் கண்ணன் வீட்டிற்கு வருவதற்கே பயந்து சாலையோரம், தெருக்களில் பல நாட்கள் படுத்துள்ளார்.
இந்த நிலையில் மூத்த மகன் ஜீவனாம்சம் தருவதாக கூறியுள்ளார். ஆனால் கண்ணன் எங்களுடைய நிலத்தை பெற்றுத்தந்தால்போதும். அதை வைத்து கொண்டு எங்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்வோம். சுயமாக சம்பாதித்து வாழ்வோம் என்றார்.
இந்த வயதிலும் கண்ணன் தன்னம்பிக்கையுடன் பேசியதால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. என்னிடம் மனு கொடுத்தபோது கூட, இரண்டு மகன்களுக்கு எழுதிக்கொடுத்த நிலத்தில் இருந்து தலா 60 செண்ட் கொடுத்தால் போதும், அதை வைத்துக்கொண்டு சாப்பிட்டு வாழ்கிறோம் என்றார் கண்ணன்.
இதனை கருத்தில்கொண்டு மொத்த இடத்திற்கான பட்டா, சிட்டா, அனுபவம் கண்ணன் பெயரில் 2.12 ஏக்கர், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கர் மாற்றப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு இந்த நிகழ்வு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிள்ளைகள் மூலம் தொடர்ந்து உடல் ரீதியான துன்புறுத்தல் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கரண்டி சாப்பாடு மட்டும்தான் பெற்றோர்கள் கேட்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுபோன்ற புகார்களை சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் அல்லது என்னிடம் நேரடியாக வழங்கலாம் என்றார்.