அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
அந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஐ. பெரியசாமியை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்து வருகிறார். லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக ஒப்புதல் பெற்று ஐ.பெரியசாமி மீதான வழக்கை நடத்தவேண்டுமென அத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகிய அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் ஐ.பெரியசாமி சார்பாக வழக்கறிஞர் ராம்சங்கர் ஆஜரானார். கீழமை நீதிமன்ற விசாரணை, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிறப்பாக வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர் ராம்சங்கர், உயர்நீதிமன்ற உத்தரவுக்கும் விசாரணை நீதிமன்ற விசாரணைக்கும் உச்சநீதிமன்றத்தில் தடைபெற்றார். உச்சநீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த தடை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.