Skip to main content

காஞ்சிபுரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டிடங்கள்!- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைப்பு! 

Published on 13/09/2020 | Edited on 13/09/2020

 

kanchipuram court building inaugurated chennai high court chief judge

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை, காணொலிக் காட்சி வாயிலாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி திறந்து வைத்தார்.


தமிழகத்தில் தாலுகா அளவில் நீதிமன்றங்கள் இல்லாத 17 தாலுகாக்களில், ரூ.9.47 கோடி செலவில் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என, சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கடந்த 2007- ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் இயங்கிவந்த வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, 50 சென்ட் பரப்பளவில் இயங்கி வந்த அந்த கட்டிடம் மற்றும் அதன் வளாகம் சீரமைக்கப்பட்டு,நீதிமன்ற வளாகத்துக்குத் தேவையான கூடுதல் கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டன.

kanchipuram court building inaugurated chennai high court chief judge

ரூ.80.33 லட்சம் மதிப்பீட்டில், செய்யூரில் புதிதாகக் கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான பொறுப்பு நீதிபதிகளாக உள்ள, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் முன்னிலையில்,  காணொலிக் காட்சி வாயிலாக,  சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்தவாறு, தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தொடங்கி வைத்தார்.

 

புதிதாகக் கட்டப்பட்ட காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் இருந்தவாறு,  காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உள்ளிட்டோர், காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, மக்களுக்கு நீதித் துறையின் மீது உள்ள நம்பிக்கையைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து திறம்பட செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 

தன்னுடைய பனிக்காலத்தில், தமிழ்நாடு முழுவதும் அதிகப்படியான நீதிமன்றங்களைத் திறந்துவைத்து வருவது  மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதற்கு உறுதுணையாக இருந்து, அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளித்து வரும் சட்டத் துறை அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்