கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் இடத்திற்கு அருகில் மணல் குவாரி நடத்தத் தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நாகை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொள்ளிடம் அருகில் திருச்சிற்றம்பலம் என்னும் கிராமத்தில் மணல் குவாரி துவங்குவதற்கு தடை கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மோகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், தடுப்பணை கட்டும் இடத்திற்கு அருகில் மணல் குவாரி நடத்துவதால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். குடிநீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மணல் குவாரி நடத்தக் கூடாது என அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு மார்ச் 13-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.