திருச்சியில் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு மாவட்டம் வாரியாக கொண்டு சேர்க்கப்படும் இந்த புகையிலை குட்கா உள்ளிட்டவை கடைகளில் விற்பனைக்கு வரும்போது அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது திருச்சியில் வாகன சோதனையின்போது 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துக்கள் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி சஞ்சீவி நகர்ப் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மைசூரிலிருந்து முட்டைக்கோஸ் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது வாகனத்திற்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த முட்டைகோஸ் மூடைகளுக்கு இடையே கிலோ கணக்கில் குட்கா, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் இருந்ததைக் காவல் துறையினர் கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு டன் அளவிலான இந்த போதை வஸ்துக்களின் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுனர் மற்றும் வாகனங்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதை வஸ்துக்கள் திருச்சி நகருக்குள் எங்கெல்லாம் கொண்டு சேர்க்கப்படுகிறது என்ற விவரங்களைக் கேட்டறிந்து வருகின்றனர்.