சென்னை மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 96வது மார்கழி இசைத் திருவிழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர், ''தமிழர்களின் இசை வடிவம் பழமையானது., செழுமையானது. தொல்காப்பிய காலத்திற்கும் முன்பிருந்தே தமிழ் இசை வடிவம் இருந்து வருகிறது. பொதுவாக முதலமைச்சரிடம்தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் நான் இங்கு இசைக் கலைஞர்களுக்கு வைக்கும் கோரிக்கை என்பது காலத்தின் தேவை என்று கருதுகிறேன்.
இன்றைய நாளிதழ் ஒன்றில் மியூசிக் அகாடமியின் தலைவர் முரளி பேட்டியளித்துள்ளார். நான் அதை காலையில் படித்தேன். அதில் தனது கொள்கையை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். எங்களின் விழாக்களின் மூலமாக வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம் என்று முரளி சொல்லியிருக்கிறார். இந்தக் கருத்துதான் இப்போது நாட்டுக்குத் தேவையான கொள்கை.
இந்தக் கொள்கை அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, இதனை அரசியல் கட்சிகள் வலியுறுத்துவதாக மட்டும் நீங்கள் சுருக்கி விடக்கூடாது. இதுபோன்ற கலை அமைப்புகளின் கொள்கையாக, ஒவ்வொரு தனி மனிதனின் கொள்கையாக மாற வேண்டும்; எதிரொலிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் மியூசிக் அகாடமி போன்ற இசையமைப்புகள் தமிழிசைக்கு, தமிழ்ப் பாடல்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் இலக்கியத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன. அந்தப் பாடல்களும் இதுபோன்ற இசை மன்றங்களில் தவறாமல் ஒலிக்க வேண்டும். பக்தி இசையாக இருந்தாலும், திரை இசையாக இருந்தாலும், மெல்லிசையாக இருந்தாலும், பாப் இசையாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும் தமிழிசையாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய அன்பான வேண்டுகோள்.
மொழி இருந்தால்தான் கலை இருக்கும். இசை வளர்ப்பது கலை வளர்த்தல் மட்டுமல்ல தமிழ் வளர்ப்பதும்தான் என்பதை மனதில் வைத்து அனைத்துக் கலைஞர்களும், அனைத்து கலை அமைப்புகளும் செயல்பட வேண்டும் என இந்த நிகழ்ச்சியில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஆட்சிப் பொறுப்பேற்று எந்தவித பிரச்சனையும் இல்லாமல், பரபரப்பும் இல்லாமல் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் எந்த டென்ஷனும் இல்லாமல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அது இந்த நிகழ்ச்சிதான்'' என்றார்.