அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, வழக்கு விசாரணைக்காக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்.
புகைப்படங்கள் : ராம்குமார்
நேற்றுமுன்தினம் அவர் விசாரணைக்கு வந்தபோது, வழக்கமாக வழக்கறிஞர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் வழியில் அழைத்துச்செல்லப்பட்டார். அப்பொழுதே செய்தியாளர்கள் எளிதில் அவரை நெருங்காதவாறு காவல்துறையினரால் கவனமாக அழைத்துச்செல்லப்பட்டார். அதையும் தாண்டி, நாம் அவரிடம் சில கேள்விகளை வைத்தோம். ஜீப்பில் இறங்கியதிலிருந்து நீதிமன்றம் உள்ளே செல்லும் வரை அவரைத் தொடர்ந்து சென்று, 'இதே வழக்கில் சம்மந்தப்பட்ட முருகன், கருப்பசாமி போன்றோர் செய்தியாளர்களிடம் பேச முயற்சித்தனர், முருகன் சில கருத்துகளை கூறினார். ஆனால், நீங்கள் உங்கள் தரப்பு எண்ணத்தை வெளிப்படுத்தாமல் இறுக்கமாக இருப்பது ஏன்?', 'நீங்கள் அளித்த வாக்குமூலங்கள் முற்றிலும் பொய் என அவர்கள் கூறுகிறார்களே' என்று அவரிடம் கேள்விகளை வைத்தோம். நம்மை திரும்பிப் பார்த்த நிர்மலாதேவி எதுவும் பேசவில்லை.
கேள்விகளைக் கேட்கக்கூடாது என்று காவலர்கள் தடுத்தனர். அதைத் தாண்டியும் அவரைத் தொடர்ந்தோம். இப்படி நிர்மலாதேவி எதுவும் பேசிவிடக் கூடாது என்பதில் மிகுந்த சிரத்தை எடுக்கும் காவல்துறை இன்று அவர் நீதிமன்றம் வந்தபோது, நாம் அவரை நெருங்கி கேள்வி கேட்பதைத் தவிர்ப்பதற்காக, இதுவரை இல்லாத வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தின் நீதிபதிகள் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு வழியில் நிர்மலாதேவியை அழைத்துச் சென்றனர். வழக்கமான வழியில் சிறிது தூரம் நடக்கவேண்டியிருக்கும். இந்த சிறப்பு வழியில் வாகனத்திலிருந்து இறங்கி ஒரு நிமிடத்திற்குள்ளாக நீதிமன்றத்தை அடைந்துவிடலாம். யாரும் அவரை நெருங்கி, எதையும் கேட்டுவிடக்கூடாது என்பதில் காவல்துறையும் அவர்களுக்கு ஆணையிடுபவர்களும் உறுதியாய் இருப்பதை இது காட்டுகிறது.