பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் மு.ஹி.ஜவாஹிருல்லா பேசுகையில், ''இவர் தனது பெயருக்கு முன்னால் பேராசிரியர் பேராசிரியர் என்று போட்டுக் கொள்கிறார். ஆனால் ஆவணங்களைப் பார்க்கும் பொழுது இவர் உதவி பேராசிரியர்தான். அசிஸ்டன்ட் ப்ரொபஸர் தான் என்று ஜெயலலிதா பேசியுள்ளார். அப்பொழுது வீரமாக எழுந்து நின்ற பேராசிரியர் 'ஆம் உண்மைதான். நான் உதவி பேராசிரியர் தான். என்னுடைய கட்சிக்காரர்கள், என்னுடைய நண்பர்கள், அரசியல் தலைவர்கள் என்னை பேராசிரியர் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஒன்றை நான் கேட்க விரும்புகின்றேன்.
இந்த சபையில் உறுப்பினராகி முதலமைச்சராக ஆகக் கூடிய அளவிற்கு இருக்கக்கூடியவர்கள் கடந்த காலம் செய்த தொழில்களை தங்களின் பெயர்களுக்கு முன்னால் போட்டுக் கொள்ள முடியுமா? அதைப் பற்றி நான் பேசினால் இந்த அரங்கம் தாங்குமா? என்று சொன்னார். ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக, மேலவை உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக அவருடைய பங்களிப்பு மிகப்பெரிய பங்களிப்பாக இருந்தது. பேராசிரியர் கலைஞரைப் போன்று காலையிலேயே எழுந்தவுடன் பத்திரிகைகளை படித்து விடுவார். ஏறத்தாழ 8 நாளிதழ்களை படித்துவிட்டு குறிப்புகள் எல்லாம் எடுத்துக் கொண்டு பத்திரிகை செய்திகளில் வரலாற்றுப் பிழை எதுவும் இருந்தால் உடனடியாக குறிப்பிட்ட பத்திரிகையை அழைத்து நீங்கள் ஒரு வரலாற்று பிழை செய்திருக்கிறீர்கள் என்று சுட்டிக் காட்டுவார். கலைஞரும், பேராசிரியர் அன்பழகனும் காலையிலேயே பத்திரிகைகளை படித்ததன் காரணமாக இருவரும் கருத்து பரிமாற்றத்தை செய்து மக்களுக்கு அற்புதமான செய்திகளை எடுத்துச் சொன்னார்கள்'' என்றார்.