புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆடுகள் திருட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனைத் தடுக்க முடியாமல் போலீசாரும் விவசாயிகளும் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (திங்கள் கிழமை) மாலை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் பனசக்காடு செல்லும் சாலை அருகே வாழாசமுத்திரம் குளக்கரை ஓரமாக 3 பெரிய செம்மறி ஆடுகளை வைத்துக் கொண்டு 2 பேர் யாருக்கு எத்தனை ஆடுகள் எனச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகத் தனது வயலுக்குச் சென்ற சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவர்களிடம் சென்று இது யாருடைய ஆடுகள் எதற்காகச் சண்டை எனக் கேட்கும் போதே இருவரும் ஆடுகளை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.
அதன் பிறகே இவர்கள் ஆடு திருடர்கள் என்பது தெரிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆடுகளை மீட்ட இளைஞரின் தந்தை குமார் மீட்கப்பட்ட ஆடுகளின் படங்களுடன் முகநூலில் பதிவு வெளியிட்டுள்ளார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் பனசக்காடு சரவணன் என்ற விவசாயி தான் வளர்த்த ஆடுகளைத் தான் காணவில்லை என்று தேடிக் கொண்டிருப்பதாகத் தேடி வந்துள்ளார். ஆடுகளின் உரிமையாளர் சரவணனிடம் திருடர்களிடம் இருந்து இளைஞரால் மீட்கப்பட்ட ஆடுகளை ஒப்படைத்தனர். இதனால் அந்த இளைஞரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இதுவரை இரவில் ஆடுகள் திருடியவர்கள் தற்போது பட்டப்பகலில் ஆடுகள் திருடிவிட்டுத் தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க வேண்டும் என்கின்றனர்.