சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. அதிமுக கட்சியின் அவைத்தலைவர் மதுசூனன், ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும், இக்கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது என்று திமுக உட்பட 12 தரப்பினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், "தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என்றும், விடுபட்ட 9 மாவட்டங்களை 4 மாதங்களில் மறுவரையறை செய்து தேர்தலை நடத்தவேண்டும்" என்றும் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.