
தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு பைபிள் வழங்கி மதமாற்றம் செய்வதாக கூறி இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். இந்தநிலையில் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையால் போராட்டம் கைவிடப்பட்டது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி ரோட்டில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. கிறித்துவர்களால் நடத்தப்பட்டும் அந்த பள்ளியில் மாணவர்களுக்கு பைபிள்களை வழங்கி, அதை படிக்க சொல்லி அதில் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்குவதாக புகார் எழுந்தது.
"அந்த பள்ளியில் மாணவர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி, 16ம் தேதி பள்ளி முன் போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சியினர் முடிவு செய்தனர். இதனிடையே, கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடாஜலம் தலைமையில் அமைதி பேச்சுவார்தைக்கு அனைவரும் அழைக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதுகுறித்து, இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி நம்மிடம், "பள்ளி மாணவர்களுக்கு பைபிள் வழங்கி மதமாற்றம் செய்வதோடு, பைபிளில் இருந்து கேள்வி கேட்டு தேர்வு நடத்தி அதிலிருந்து மதிப்பெண் வழங்குகின்றனர். இத்தோடு அதை நிறுத்தவில்லை என்றால் பள்ளி முன் போராட்டம் நடத்துவோம்," என்றார்.
பள்ளி தாளாளர் ஜான் கூறுகையில், "பள்ளி ஆண்டுவிழாவின் போது மட்டுமே பைபிளில் இருந்து தேர்வு நடத்தி அதில் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு 200 மாணவர்களில் 14 பேர் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொண்டனர். இது தவிர அவர்கள் கூறுவதுபோல மதமாற்றமெல்லாம் நாங்கள் செய்யவில்லை, நடக்கவும் இல்லை."என்றார்.
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் எம்.ரத்தினசேலுவோ, "இனிமேல் பள்ளியில் பைபிள் வழங்கக்கூடாது என கூறியுள்ளோம். எவ்வித மதப்பிரச்சாரத்திலும் பள்ளி நிர்வாகம் ஈடுபடக்கூடாது என்று கூறியிருக்கிறோம் என தெரிவித்தார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
- க.செல்வகுமார்