ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஸ்டெர்லைட் குறித்து குமரெட்டியபுரம் மக்கள் தவறான தகவல் பரப்பி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆலையின் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க போவதாக அச்சுறுத்தல், மிரட்டல் வருகின்றன. இதுகுறித்து தூத்துகுடி மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆலை முன் போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டது.
இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி எஸ்.பி.,க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இது குறித்து ஆலை நிர்வாகம் புதிய மனு அளிக்கலாம் என அதில் கூறியுள்ளது.