
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காஷ்மீருக்குச் சுற்றுலாச் சென்ற பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதால் பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்துள்ளது.
இந்நிலையில் டெய்லர்-2 படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காஷ்மீர் தாக்குதல் விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், ''அந்த பயங்கரவாத செயல் மிகவும் கடுமையாக கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் இயற்கை அமைதி திரும்பியது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என இப்படி செய்துள்ளார்கள். இதை செய்தவர்களுக்கும் அதற்கு பின்னால் இருப்பவர்களுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். திரும்பவும் இதுபோல செய்ய வேண்டும் என அவர்கள் கனவில் கூட நினைக்கக் கூடாது. அப்படியொரு நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.