கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளின் பர்மிட் உடனடியாக ரத்து செய்யபப்டுவதோடு, இதுகுறித்து ஜன.12ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திடீர் சோதனை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து நாகர்கோயில், கன்னியாகுமரி, நெல்லை, திருச்செந்தூர், திருப்பதி, ராமேஸ்வரம், திருச்சூர், எர்ணாகுளம், குருவாயூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ச்சியாக வரும் பொங்கல் விடுமுறையையொட்டி பயணிகள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரைவுப் பேருந்து, ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, இப்பேருந்துகளில் பயணம் செய்ய கடந்த ஒரு மாதமாக டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது. விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் சில நாள்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு முடிந்தது.
இந்தப் பேருந்துகளில் இடம் கிடைக்காத பயணிகள், தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதைப் பயன்படுத்தி, தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பலர், முன்பதிவு டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில், வட்டார போக்குவரத்துத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் 15 சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினர் ஜன.12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தனியார் ஆம்னி பேருந்துகளில் திடீர் சோதனை நடத்த உள்ளனர்.
சுங்கச்சாவடிகள், முக்கிய சந்திப்புகள், பேருந்து நிறுத்தங்களில் ஆய்வு செய்ய உள்ளனர். பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தல், வரி செலுத்தாமல் இயக்குதல், அதிக பயணிகளை ஏற்றுதல், பாதுகாப்பு விதிகளை மீறுதல் உள்ளிட்ட விதிமீறல்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஒவ்வொரு சரகத்திற்கும் உட்பட்ட மாவட்டங்களில் 50 ஆம்னி பேருந்துகள் தினமும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு டிக்கெட்டுகளைக் கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் அந்த பேருந்தின் பர்மிட் ரத்து செய்யப்படும்” என்றார்.