Skip to main content

"தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசிகளை..."- ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

 

private hospitals coronavirus vaccines admk chief opanneerselvam

தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசிகளை அரசு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உணவுப் பஞ்சமும், தொற்று நோய்களும், அந்நியர்களின் படையெடுப்பும் வராதபடி நடத்தப்படுகிற நாடே நல்ல நாடு என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க அவற்றைச் செயல்படுத்தும் கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இதன் அடிப்படையில், தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா கொடுந்தொற்று நோயினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ஒருவருக்கு இரண்டு முறை தடுப்பூசி (Two Doses) என்பதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 16 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுகின்றன. 26/06/2021 அன்று காலை நிலவரப்படி, மொத்தம் 1,44,83,205 தடுப்பூசிகள் தமிழக மக்களுக்கு செலுத்தப்பட்டு இருக்கின்றன. அதாவது பத்து விழுக்காட்டிற்கும் குறைவாகத்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

 

இந்தச் சூழ்நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் விநியோகிக்கப்பட்ட 13.9 லட்சம் மருந்துகளில், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்றும், ஜூலை மாதத்திற்கு 71.5 லட்சம் மருந்துகளை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது என்றும், இதில் 17.75 லட்சம் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. ஏற்கனவே, 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற சூழ்நிலையில் ஜூலை மாதத்திற்கென்று மேலும் 17.75 லட்சம் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால், 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்துகள் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன. 

 

பொதுவாக மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடிச் செல்வதற்குக் காரணம், அங்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுவதும், இணையதளத்திற்கு சென்று எந்தவிதமான பதிவும், முன்னேற்பாடும் இல்லாமல் நேரடியாக தடுப்பூசி செலுத்துகின்ற வசதி உள்ளதும்தான். இது மட்டுமல்லாமல், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சமுதாய நலக்கூடங்கள் போன்றவற்றில் இலவச தடுப்பூசி முகாம்களை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தியிருப்பதும் இதற்கு முக்கியக் காரணம். 

 

அதேசமயத்தில், தனியார் மருத்துவமனைகளில் ஒரு தடுப்பூசிக்கு 850 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை பணம் செலுத்தக்கூடிய நிலை இருக்கின்றது. இது தவிர, முன்பதிவு அவசியம் என்ற நிலைமையும் உள்ளது. பெரும்பாலான இடங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்த காரணங்களால், தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாதத் தடுப்பூசி மருந்துகள் லட்சக்கணக்கில் தேங்கி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் உள்ள பயன்படுத்தப்படாத மருந்துகளைப் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். 

 

எனவே, தமிழக முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசி மருந்துகளை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் தமிழகத்தின் தேவை விரைவில் பூர்த்திச் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்