Skip to main content

“விலங்குகளுக்கு உணவளிக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்” - உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்!!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

"Private companies should come forward to feed the animals" - High Court insists

 

ஆளுநர் அளித்த 10 லட்ச ரூபாய் நிதி, தெரு விலங்குகளின் ஆரம்பகட்ட உணவிற்கு உதவிபுரிந்துள்ளதாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஊரடங்கில் உணவின்றித் தவிக்கும் வாயில்லா பிராணிகளுக்கும் உணவு அளிக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றித் தவிக்கும் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிக்கக் கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 9 லட்சம் ரூபாயை விடுவித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தார். தெரு நாய்கள், விலங்குகளுக்கு உணவளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு மாவட்ட ரீதியாக ஒதுக்கியுள்ள தொகையைில் சில மாவட்டங்களுக்கு 9 ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது போதுமானதல்ல என்றும் தெரிவித்தார்.

 

இதையடுத்து, தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக அரசு நிதி ஒதுக்கும் முன், 10 லட்சம் ரூபாயை ஆளுநர் ஒதுக்கீடு செய்ததாகத் தெரிவித்த நீதிபதிகள், கரோனா ஊரடங்கு நேரத்தில் உணவின்றித் தவிக்கும் வாயில்லா பிராணிகளுக்கு உணவளிக்க நிதியுதவியோ, பொருளுதவியோ வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 9ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்