Skip to main content

கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் கைதிகள் பாதுகாப்பாக உள்ளனர்! - உயர் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு விளக்கம்!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

தமிழக சிறைகளில் கைதிகள் கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


   Prisoners safe from corona infection -  tamilnadu govt explanation in High Court

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிறைகளில் நெருக்கடியை குறைக்க வேண்டும் என்றும், 7 ஆண்டுகள் மற்றும் அதற்கு கீழ் தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் கைதாகி சிறைகளில் உள்ளவர்களுக்கு ஜாமீன் மற்றும் பரோல் வழங்க உயர்மட்டக்குழு அமைத்து முடிவு செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, தமிழக சிறைகளில் இருந்த ஆயிரக்கணக்கான விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,  கரோனா அச்சுறுத்தல் காரணமாக கைதிகளை அவர்களின் குடும்பத்தினர் சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு பரோல் வேண்டி பல கைதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 
 

nakkheeran app



இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சிறைகளில் கைதிகள் கரோனா தொற்றுக்கு ஆளாகாமல்  பாதுகாப்பாக உள்ளதாகவும், புதிய கைதிகளை அடைப்பதற்கு  37 மாவட்ட மற்றும் கிளை சிறைகள் தனி சிறைகளாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையைப் பொறுத்தவரை, புதிய கைதிகள் யாரும் புழல் சிறையில் அடைக்கப்படுவதில்லை. சைதாப்பேட்டை கிளைச் சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவும் அபாயம் உள்ள அசாதாரண சூழலில், தமிழக சிறைகளில் புதிதாக 58 செல்போன்கள் வாங்கப்பட்டு, வீடியோகால் மூலமாக 15 ஆயிரம் கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் பேசியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. 

தமிழக சிறைத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்