திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்து நகர், ரெங்கநாதபுரம், மில்மேடு, ரத்னகிரி, சாந்திநகர், ஏ.வி.எஸ்.நகர், வரதராஜபுரம், புதுப்பட்டி உட்பட 10 கிராமங்கள் உள்ளன. இதில் போக்குவரத்து நகருக்கு மட்டும் முறையாக குடிதண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் செய்கின்றனர். இதுதவிர 8வது வார்டு பகுதியில் 10நாட்களுக்கு ஒருமுறை குடிதண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர். கடந்த ஒருமாத காலமாக விநியோகிக்கப்படும் குடிதண்ணீர் மாசடைந்து வருவதாகவும், பாத்திரங்களில் சேகரித்து வைக்கும் போது புழுக்கள் மிதப்பதை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்து ஊராட்சி செயலர் தண்டபாணியிடம் புகார் செய்துள்ளனர்.
இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மருத்தவத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்ததை அடுத்து வெள்ளிக்கிழமை காலை 6மணியளவில் அப்பகுதிக்கு வந்து பாத்திரங்களில் பிடித்து வைக்கப்பட்டிருந்த குடிதண்ணீரை சோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கு கடந்த ஒருவாரகாலமாக மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர பலருக்கு வயிற்று போக்கு நோய் வந்து அவதிப்பட்டு வருகின்றனர். பலமுறை ஊராட்சி செயலர் தண்டபாணியிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் நாங்கள் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தோம்.
இதையடுத்து அதிகாரிகள் வந்து பார்வையிட்டு குடிதண்ணீரை சோதனைக்காக எடுத்துச்சென்றுள்ளனர். ஊராட்சி செயலாளர் இனிமேல் உங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைக்காது, குழாய் இணைப்பை துண்டித்துவிடுவேன் என மிரட்டுகிறார். மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு முறையான சுகாதாரமான குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்றும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிதண்ணீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக புகார் செய்த பொதுமக்களிடம் உங்களுக்கு குடிதண்ணீர் கொடுக்க மாட்டேன் குழாய் இணைப்பை துண்டித்துவிடுவேன் என கூறும் ஊராட்சி செயலாளர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?