திருட்டு வழக்கில் கைதாகி விருத்தாசலம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரிய பகுதியில் உள்ள துர்கை அம்மன் கோவில் அருகே கடந்த 30.10.2020 அன்று இளம் பெண் ஒருவரது கழுத்தில் இருந்த செயினை அறுத்த திருடனை நெய்வேலி காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து சக்தி நகரை சார்ந்த மணி என்பவரது மகன் செல்வமுருகன் என்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து 30.10.2020 அன்று ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நெய்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று (05.11.2020) நள்ளிரவு உடல்நலக்குறைவின் காரணமாக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் பல கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவரது உடல் விருத்தாச்சலம் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.