கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் உள்ளது இந்திலி கிராமம். இந்த கிராமம், உளுந்தூர்பேட்டை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சிக்கும் சின்னசேலத்திற்கும் இடையில் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு பைக் திருடு போயுள்ளது. இது சம்பந்தமாக சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த சக்கரவர்த்தி, சௌந்தர்ராஜன் ஆகிய இருவர், நாமக்கல் மாவட்டத்தில் பைக் திருட்டு வழக்கில் அம்மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், போலீஸ் விசாரணையில் அளித்த வாக்குமூலத்தில் இந்திலி பகுதியில் பைக் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தத் தகவல் சின்னசேலம் காவல் நிலையத்திற்குத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சிவராமன், முஸ்தாபா ஆகியோர் திருட்டு வழக்கில் ஏற்கனவே நாமக்கல் சிறையில் இருந்த சக்கரவர்த்தி மற்றும் சௌந்தரராஜன் ஆகியோரை சிறையில் இருந்து (நீதிமன்ற உத்தரவின் மூலம்) விசாரணைக்காக கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆத்தூர் அருகேவந்தபோது, சக்கரவர்த்தி போலீசாரிடம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து காவலர் முஸ்தபா, சக்கரவர்த்தியை கழிப்பறை உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சக்கரவர்த்தி, திடீரென முஸ்தபாவை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் முஸ்தபாவுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
அவர் உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து மற்றொரு குற்றவாளியான சௌந்தரராஜனை போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து, சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார், முஸ்தாபாவை தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி சக்கரவர்த்தியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.