சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஹரி. ஆயுள் தண்டனைக் கைதி. இவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நன்னடத்தையின் அடிப்படையில் அவருக்கு சிறைத்துறை நிர்வாகம் சிறை விடுப்பு (பரோல்) வழங்கியது. இதையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 3 நாள்கள் பரோலில் சென்ற அவர், விடுப்பு முடிந்த பிறகும் சிறைக்குத் திரும்பாமல் தலைமறைவானார்.
இதையடுத்து சிறைத்துறை காவலர்கள் அவரை தீவிரமாக தேடி வந்தனர். சிறை வாயில் முன்பு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர், மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வரும் ராமகிருஷ்ணன் என்பவருடன் அவருடைய மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்றது தெரிய வந்தது. கைதியை தப்பிக்க வைத்ததாக, உடனடியாக ராமகிருஷ்ணன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில், சிறைத்துறை அலுவலர்கள் கைதி ஹரியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்த தொல்லை தாங்க முடியாமல் தான் தலைமறைவாகிவிட்டதாக சிறைத்துறை அலுவலர்களுக்கு அலைபேசி மூலம் குரல் பதிவு அனுப்பி உள்ளார். இதையடுத்து, கைதிகளை சிறை விடுப்பில் செல்ல அனுமதிக்கும் பிரிவில் பணியாற்றி வரும் அலுவலர், கைதியுடன் அலைபேசியில் பேசியவர் உள்ளிட்ட மூன்று பேரிடம் கோவை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் விசாரணை நடத்தினார். ஆனாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை.
இது தொடர்பாக கோவை மத்திய சிறை கூடுதல் எஸ்பி சதீஸ்குமார் விசாரணை நடத்தினார். இதில், ஏற்கனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்ட வார்டன் ராமகிருஷ்ணனுக்கும், தலைமறைவான கைதி ஹரிக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த விசாரணை அறிக்கை, சேலம் மத்திய சிறை எஸ்பி தமிழ்ச்செல்வனிடம் வழங்கப்பட்டது. அதையடுத்து ராமகிருஷ்ணனை சிறை நிர்வாகம் உடனடியாக நிரந்தர பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தலைமறைவான ஆயுள் கைதி ஹரியை பிடிக்க சென்னை காவல்துறையிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.