Skip to main content

மின்திருட்டில் சிக்கிய சிறைத்துறை உயரதிகாரிகள்!- விழிமூடிய மின்வாரிய விஜிலன்ஸ்!

Published on 10/04/2022 | Edited on 10/04/2022

 

Prison officials electricity vigilance!

 

தமிழகச் சிறைகளில் பணிபுரியும் உயரதிகாரிகள், தங்களது சுயநலத்துக்காக,  பெரிய அளவில் மின்திருட்டில் ஈடுபட்டுள்ளார்கள். எந்தெந்த சிறைகளில் யார் யாரென்பதைப் பார்ப்போம்!

 

லட்சங்களில் அரசு சம்பளம் பெற்றுவரும், சிறைகள் மற்றும் சீர்திருத்தத்துறை சரக சிறைத்துறை துணைத்தலைவர்கள் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர்கள் வீடுகளில்தான், முறைகேடான மின்திருட்டு நடந்துள்ளது. எப்படியென்றால், அரசால் கட்டணம் செலுத்தப்படும் சிறைச்சாலைக்கான மின்சாரத்தை, அரசை ஏமாற்றி தங்களது வீடுகளுக்குத் தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

 

சிறைத்துறையில் 30 ஆண்டு காலம் பணிபுரிந்த ஓய்வுபெற்ற வார்டர் சேகர் ‘சிறைத்துறை உயரதிகாரிகள் எவ்வளவோ முறைகேட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதில் மின்திருட்டும் அடங்கும். இந்த அதிகாரிகள், அரசுப் பணத்தை மோசடி செய்கிறார்கள். மின்திருட்டு குறித்து சரியாகக் கணக்கீடு செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்..’ என்று புகாரளிக்க, மின்வாரிய அமலாக்கப்பிரிவு கண்டறிந்து அபராதம் விதித்துள்ளது.

 

Prison officials electricity vigilance!

 

கோவை சரக சிறைத்துறைத் துணைத்தலைவர் சண்முகசுந்தரம், தனக்கு அரசு வழங்கிய வீட்டின் மின் இணைப்பு எண் 030110031629-க்கு உரிய மின்சாரத்தைப் பயன்படுத்தாமல், கோவை மத்திய சிறையின் மின்சாரத்தை திருட்டுத்தனமாக தனது வீட்டுக்கு உபயோகப்படுத்தியிருக்கிறார். 2008-ல் பெறப்பட்ட இந்த மின் இணைப்பின் முதல் பயன்பாட்டுக்கு உரிய மின் கட்டணத்தைச் செலுத்தாமல், அந்த இணைப்பு துண்டிக்கப்படாமல் இருப்பதற்காக குறைந்த பயன்பாட்டை மட்டும் கணக்கில் காட்டி, நூதன மின் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இதுவரையிலும் இருந்த அனைத்து கோவை சரக சிறைத்துறைத் துணைத்தலைவர்களும் இதே ரீதியில் நடந்துள்ளனர்.

 

Prison officials electricity vigilance!

 

கோவை  சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா, அரசு வழங்கிய வீட்டின் மின் இணைப்பு எண் 030110031630-க்கு உரிய மின்சாரத்தைப் பயன்படுத்தாமல், கோவை மத்திய சிறையின் மின்சாரத்தை உபயோகித்துள்ளார். கடந்த 2021 டிசம்பர் மாதம், காவலர் வீட்டு வசதி வாரிய ஆட்கள் சிறை வளாகத்தில் வேலை பார்த்தபோது,  திருட்டுத்தனமாக இணைக்கப்பட்ட மின் வயரை வெட்டியதால்,  அந்த மாத மின் கட்டணமாக ரூ.10,426 கணக்கிடப்பட்டது. ஊர்மிளாவும் குறைந்த பயன்பாட்டை மட்டுமே கணக்கில் காட்டியுள்ளார். மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாகப் பேசப்படும் விவகாரத்தில் இவரது பெயரும் அடிபடுகிறது.

Prison officials electricity vigilance!

 

மதுரை சரக சிறைத்துறைத் துணைத்தலைவர் பழனி, அவர் குடியிருந்துவரும் அரசு வழங்கிய வீட்டின் மின் இணைப்பு எண்:05, மதுரை மண்டல ஞானஒளிவுபுரம் பிரிவு இணைப்பு எண் 956-க்கு உரிய மின்சாரத்தைப் பயன்படுத்தாமல், மதுரை மத்திய சிறையிலிருந்து முறைகேடாக இணைப்பை ஏற்படுத்தி பயன்படுத்தி வந்திருக்கிறார். 2006-ஆம் ஆண்டு பெறப்பட்ட இவ்விணைப்பிற்கு 26-9-2009 வரையிலும் உள்ள நிலுவைத் தொகை ரூ.3,655-ஐ செலுத்தாத காரணத்தால், 18-10-2009 அன்று அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனாலும், அந்தக் கட்டணம் செலுத்தப்படவில்லை. இந்த மின் திருட்டில், மதுரை சரக சிறைத்துறைத் துணைத்தலைவராக இவருக்கு முன்னால் இருந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

 

வேலூர் சரக சிறைத்துறைத் துணைத்தலைவர் குடியிருந்துவரும் வீட்டிலும், மத்திய சிறையிலிருந்து திருட்டுத்தனமாக இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, முறைகேடாக மின்சாரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த உயரதிகாரிகளின் வீடுகளில் 3-லிருந்து 5 ஏ.சி.க்கள், 2-லிருந்து 3 LED டி.வி.க்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிட்ஜுகள், மைக்ரோ ஓவன், தண்ணீர் மோட்டார், கம்யூட்டர், அதிக மின்னழுத்த சோடியம் விளக்குகள் எனச் சகலமும் திருட்டு மின்சாரத்திலேயே இயங்கி வந்துள்ளன.

 

புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு,  மின்திருட்டைக் கண்டறிந்து அபராதம் விதித்துள்ள மதுரை மின்வாரிய அமலாக்கப்பிரிவின் செயற்பொறியாளர் பிரபாகரை தொடர்புகொண்டோம். “மின்திருட்டை சிலர் தெரிஞ்சு பண்ணுவாங்க. சிலர் தெரியாம பண்ணுவாங்க. இதுல அவங்களுக்கு ஒரு வசதியிருக்கு. முதல் தடவை நடந்த மின்திருட்டு என்றால், சம்பந்தப்பட்டவர்கள் அபராதம் செலுத்திவிட்டால், அபராதம் குறித்த தகவலை அமலாக்கப்பிரிவு வெளியிடாது. சட்டத்திலேயே இதற்கு இடமிருக்கு. இரண்டாவது தடவையும் மின்திருட்டு நடந்தால் எப்.ஐ.ஆர். ஆகிவிடும். மதுரையில் நடந்திருப்பது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல.” என்று சமாளித்தார். ஆனாலும், அபராத விபரங்களை அறியமுடிந்தது.

 

கோயம்புத்தூர் சிறைத்துறைக் கண்காணிப்பாளர் வீட்டில் நடந்த மொத்த மின்திருட்டு அபராதத் தொகை ரூ.7,40,402 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளா செலுத்திய அபராதம் ரூ.1,92,201 ஆகும். மீதி ரூ.5,40,201 இன்னும் வசூலிக்கப்படாமல்  நிலுவையில் உள்ளது.  கோயம்புத்தூர் சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் அபராதத் தொகை ரூ.1,84,236-ஐயும் செலுத்தியுள்ளார். மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி குடியிருக்கும் வீட்டின் இணைப்பு 2019-ல் துண்டிக்கப்பட்டதால், திருட்டுத்தனத்துக்கு துணைபோன மதுரை மத்திய சிறைச்சாலையின் மின் இணைப்பிலிருந்து தற்போது ரூ.1,43,845 செலுத்தப்பட்டுள்ளது.

 

Prison officials electricity vigilance!

 

9-4-2022 அன்று, கோயம்புத்தூர் சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் (9443964862), கோயம்புத்தூர் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா (9698292200), மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி (9442122068) ஆகியோரை அவர்களது கைபேசி எண்களில் தொடர்புகொண்டு, மின் திருட்டுக்கும் அவர்களுக்கும் தொடர்புண்டா என்பது குறித்து விளக்கம்பெற முற்பட்டபோது, அவர்கள் நம்மை ஏனோ தொடர்ந்து தவிர்த்தனர். மூவருக்கும் குறுந்தகவல் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. செய்தி அச்சிலேறும் வரையிலும், இதே நிலை நீடித்தது. தங்களது விளக்கத்தை நம்மிடம் பகிர அவர்கள் முன்வந்தால், பிரசுரிக்கத் தயாராகவுள்ளோம்.  

 

கோயம்புத்தூரில் நடந்த மின்திருட்டுக்கு ரூ.9 லட்சம் வரை அபராதம் விதித்துள்ள நிலையில், 13 வருடங்களாக மதுரை டிஐஜி வீட்டில் நடந்த மின்திருட்டை மூடிமறைக்கும் நோக்கத்தோடு தொகையைக் குறைத்து,   மதுரை மத்திய சிறைச்சாலை மின் இணைப்புக் கணக்கில் மின்வாரியத்துக்கு ரூ.1,43,845 மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.  மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி பதவி உயர்வுபெறுவதற்கு இந்த விவகாரம் ஒரு தடையாக இருந்துவிடக்கூடாதென, மின்திருட்டே நடக்காதது போல ‘செட்-அப்’ செய்துள்ளனர்.  

 

சிறைத்துறையும் மின்வாரியமும் அரசுத் துறைகள் என்பதால் ‘சரிக்கட்டுதல்’ நடந்துள்ளதாகவும், மதுரையில்  ‘மூடிமறைத்தல்’ கச்சிதமாக அரங்கேறியதாகவும், புகார்தாரர் தரப்பில் சந்தேகம் கிளப்பப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்