Skip to main content

ஸ்தபதி பணியிடங்களில் சிற்பக்கலை படித்தவர்களுக்கு முன்னுரிமை!- இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு!

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

கோவில்களில் ஸ்தபதி பணியிடங்களுக்கு சிற்பக்கலைக் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க, தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தமிழகத்தின் புராதன சிற்பக்கலை உள்ளிட்ட கலைகளை பாதுகாக்க, கடந்த 1957- ம் ஆண்டு மாமல்லபுரத்தில் அரசு சிற்பக்கலைக் கல்லூரி துவங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு பெற்ற இக்கல்லூரியில், கோவில் கட்டிடக் கலை, ஆகம சாஸ்திரம் உள்பட 58 பாடங்கள் நடத்தப்படுகின்றன. இக்கல்லூரியில், பாரம்பரிய கட்டிடக் கலை படிப்பில் பி.டெக். பட்டம், கவின் கலை பட்டங்கள் படித்து, ஆண்டுதோறும் 40 மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். இதுவரை 1800 மாணவர்கள் இக்கல்லூரியில் படித்து முடித்துள்ளனர். 

Priority for those who study sculpture in establishment workplace - orders to Hindu Management Department

இக்கல்லூரியில் படித்தவர்களை, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 38 ஆயிரத்து 600 கோவில்களில், பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் ஸ்தபதிகளாகவும், உதவிப் பொறியாளர்களாகவும் நியமிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி, இக்கல்லூரியில் பட்டம் பெற்ற முருகன்  என்பவர்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 

இந்த வழக்கை  நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். விசாரணையின் போது, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரியின் முதல்வர் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று ஸ்தபதி, பொறியாளர் உள்ளிட்ட பதவிகளை உருவாக்க இருப்பதாகவும், அதற்காகத் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பு பணிகள் விதிகளை வகுக்க இருப்பதாகவும், கோவில்களைப் புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்பிற்காக தனிப்பிரிவைத் துவக்கி, 2019-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Priority for those who study sculpture in establishment workplace - orders to Hindu Management Department


இதனைப் பதிவு செய்த நீதிபதி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பு பணிகள் விதிகளை 3 மாதங்களுக்குள் இறுதிசெய்ய வேண்டும் எனவும், கோவில்களில் காலியாக உள்ள ஸ்தபதி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.  புதிதாக உருவாக்கப்படவுள்ள இந்து அறநிலையத்துறையின் புதுப்பித்தல் மற்றும் பாதுக்காப்புத் துறையில் ஸ்தபதி, பொறியாளர் பதவிக்கு சிற்பக்கலைக் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரிக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமெனவும் இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார்.
 

மேலும், கோவில்களில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழமையான சிற்பங்கள், ஓவியங்கள், சிலைகளைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.


 

சார்ந்த செய்திகள்