தலைநகர் டெல்லியில் அண்ணா- கலைஞர் அறிவாலயத்தைக் கட்டி முடித்திருக்கிறது தி.மு.க.! கட்சி அலுலகமான இந்த அறிவாலயத்தை வருகிற ஏப்ரல் 2- ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த விழாவிற்காக தேசிய அளவிலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரையும் அழைத்திருக்கிறார் ஸ்டாலின். இதற்காக தி.மு.க.வின் சீனியர் எம்.பி.க்கள் அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து விழாவிற்கான அழைப்பிதழை தந்து வருகின்றனர்.
பா.ஜ.க. அல்லாத தலைவர்களை அழைத்து தேசிய அளவில் ஓர் அணியை உருவாக்குவதற்கான நிகழ்ச்சியாகவே அறிவாலய திறப்பு விழா பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ.க. தலைவர்களையும் விழாவுக்கு அழைத்தபடி இருக்கிறதௌ தி.மு.க.. சமீபத்தில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமீத்சாவை சந்தித்து அழைப்பிதழை வழங்கினார் டி.ஆர்.பாலு. அதேபோல ஒன்றைய அமைச்சர்கள் பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து விழாவுக்கு அழைக்கும்படி தி.மு.க. தலைமையிடமிருந்து வந்த அறிவுறுத்தலின் படி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க விரும்பினார் திருச்சி சிவா. நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் பிரதமர் அலுவலகத்தில் மோடி இருப்பதை அறிந்து அவரை சந்திக்க, திருச்சி சிவா தலைமையில் தி.மு.க.வைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் சென்றனர்.
அழைப்பிதழ் கொடுக்க வந்திருக்கும் விசயத்தை அதிகாரிகளிடம் தெரிவிக்க, அதனை பிரதமரின் கவனத்துக்கொ சென்றனர். பிரதமர் நரேந்திர மோடியோ, ஒருவரை மட்டும் அனுப்புங்கள் என்ற தொணியில் ஆள்காட்டி விரலை மட்டும் தூக்கி காட்டியிருக்கிறார். இதனை அடுத்து, ஒரே ஒரு எம்.பி மட்டும் உள்ளே போகலாம் என்று அதிகாரிகள் சொல்ல, அட்லீஸ்ட் 3 எம்.பி.க்களையாவது அனுமதியுங்கள் என்று தி.மு.க.வினர் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை.
இறுதியில் திருச்சி சிவா மட்டும் உள்ளே சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தி.மு.க.வின் அறிவாலய திறப்பு விழா அழைப்பிதழைக் கொடுத்து விட்டு வந்துள்ளார். புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்கப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள் பலரையும் தி.மு.க. அழைத்திருக்கும் நிலையில், இதில் எத்தனை பேர் விழாவுக்கு வருவார்கள்? என்ற எதிர்பார்ப்பு டெல்லியில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் வர வேண்டும் அல்லது இருவரில் ஒருவராவது வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தி.மு.க.விடம் இருக்கிறது. குறிப்பாக, அமித்ஷா வருவார் என்கிற நம்பிக்கையும் எதிரொலிக்கிறது.
பா.ஜ.க. தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, "தி.மு.க.வின் கட்டிட திறப்பு விழாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவது சந்தேகம்தான். வாழ்த்துச் செய்தி மட்டும் அனுப்புவார் என எங்களுக்கு தகவல். அந்த வாழ்த்து செய்தியிலும், தீன்தயாள் உபாத்யேயா மார்கில் அமைந்துள்ள தி.மு.க.வின் கட்சி அலுவலகம் திறப்பு விழாவுக்கு வாழ்த்துக்கள் என வார்த்தைகள் இடம்பெறு வகையில் அந்த வாழ்த்துச் செய்தி இருக்கும்" என்று சொல்கிறார்கள் பா.ஜ.க.வினர்.