பொருளாதார நிலை குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்: திருமாவளவன்
இந்தியப் பொருளாதார நிலை குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியப்பொருளாதார நிலை குறித்து முன்னாள் பாஜக அமைச்சர்கள் சுப்பிரமணியன் சுவாமி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பெரும் வீழ்ச்ச்சியை சந்தித்து வரும் இந்திய பொருளாதாரத்தை மீட்க முடியுமா என்ற சந்தேகத்தை அவர்கள் எழுப்பியுள்ளனர். அவர்களது விமர்சனங்களுக்கு நிதியமைச்சரோ பிரதமரோ இதுவரை பதிலளிக்கவில்லை. இந்தியாவின் பொருளாதார உண்மை நிலை என்ன என்பதை பற்றி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இந்தியப் பொருளாதாரம் கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாட்டின் மொத்த வருவாய் (GDP) 5.7 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. உண்மையான புள்ளிவிவரங்களை வைத்து மதிப்பிட்டால் அது 3.7 விழுக்காடு அளவில் தான் உள்ளது என முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். இந்த பொருளாதார சரிவின் காரணமாக லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். விலைவாசியும் உயர்ந்து வருகிறது.
மோடி அரசாங்கம் அறிவித்த 'பண மதிப்பு அழிப்பு' நடவடிக்கை ஒரு பொருளாதார அவசர நிலை என்று முதலில் சுட்டிக்காட்டியது விடுதலைச் சிறுத்கைகள் கட்சி. அந்த நடவடிக்கையை எதிர்த்து மிகப்பெரிய மாநாட்டையும் நடத்தினோம். அந்த மாநாட்டுத் தீர்மானத்தில் எச்சரித்தது போலவே இந்தியப்பொருளாதாரம் இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடியே பொறுப்பேற்க வேண்டும். தான் எடுத்த தவறான பொருளாதார நடவடிக்கைக்காக பொதுமக்களிடம் பகிரங்கமாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
நாடு பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருகிறது என்பதை அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும். அதனடிப்படையில் அவசரமான பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு, இன்றைய பொருளாதார நிலை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பிரதமர் வெளிப்படையாக விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.