முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் அவரது நினைவிடம் உள்ள மெரினாவில் குவிந்து வருகின்றனர். தற்பொழுது ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி எனப் பிரிந்து கிடைக்கும் நிலையில் தற்போது எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதற்காக அனைவரும் கருப்புச் சட்டையில் வந்திருந்தனர். அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கனிந்த இதயம் கொண்ட இரும்புப் பெண்மணி என்று அனைவராலும் போற்றப்பட்டவர் ஜெயலலிதா. 34 ஆண்டுகள் உலகமே வியக்கும் வகையில் ஓய்வு இல்லாது உழைத்து கழகத்தை வெற்றியில் அமர்த்தியவர். இப்படிப்பட்ட போற்றுதலுக்குரிய ஜெயலலிதா நாம் அனைவரையும் கண்ணீர் கடல் அலையில் ஆழ்த்திவிட்டு நம்மை விட்டும், இந்த மண்ணை விட்டும் மறைந்து விட்டார். ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் கம்பீரமாக நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என உறுதி மொழி ஏற்கப்பட்டது.
அதே நேரம், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பல்வேறு சாதாரண தொண்டர்கள், மக்கள் அஞ்சலி செலுத்தினர். தற்போது அதிமுக பல அணிகளாகப் பிரிந்து கிடக்கும் நிலை குறித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக பெண் ஒருவர் அழுது கொண்டே பேசுகையில், ''ஏம்மா, நீ பண்ணாத சாதனையே இல்லையம்மா. படிக்கிற பிள்ளைகளுக்கு லேப்டாப் கொடுத்த. பிள்ளைங்களுக்கு சாப்பாடு போட்டீங்களே அம்மா. இன்னைக்கு கட்சிய கூறு போடுறானுங்க அம்மா. என் தலைவர் வந்து படுத்துக்கிட்டாரு. நீயும் வந்து படுத்துக்கிட்டியே. நாங்க எங்க போவோம்'' என கதறி அழுதார்.