Skip to main content

சேலம் வரும் பிரதமர்; ட்ரோன்கள் பறக்க தடை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

கோவையில் இருந்து சேலத்திற்கு விமானம் மூலம் பிரதமர் மோடி வர இருக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சேலம் வருவதையொட்டி நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, வையப்பமலை வழியாக சேலம் செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் வருகையை ஒட்டி 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையம் சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்கு வர இருக்கிறது. இதனால் சேலம் விமான நிலையத்திற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்