பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். அதன்படி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக கடந்த 28 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (04-03-24) தமிழகம் வருகிறார். அதன்படி, பிற்பகல் 02.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 3.20 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு சென்று ரியாக்டர் திட்டத்தை பார்வையிடுகிறார். அதன்பின், அங்கு நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்கிறார். பிரதமர் வருகையையொட்டி கல்பாக்கத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் என 10 மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 10 வெடிகுண்டு சோதனைக் குழு, 8 மோப்ப நாய்கள் மற்றும் கடலோரப் படை மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கல்பாக்கம் அணுமின் நிலைய நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலை 04.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம் வருகிறார். அங்கு, 5 மணிக்கு பா.ஜ.க சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதால் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் பிரதமர் மோடி மாலை 06.15 மணிக்கு கார் மூலம் சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹைதராபாத் புறப்பட்டு செல்கிறார்.