பட்டியலின சமூகத்தினரைப் பற்றி சமூக வலைதளங்களில் இழிவாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையில் கடந்த 7/08/2021 அன்று புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மனுவில், "நடிகை மீரா மிதுன் ட்விட்டரில் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் இழிவாகப் பேசி காணொளி பதிவைப் பதிவிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவர் பேசியதாகக் கூறப்படும் வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது.
அந்தப் புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது கலகத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மீரா மிதுனை உடனடியாக கைது செய்யக் கோரி சென்னை அம்பத்தூரில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோ தலைமையில் கடந்த 9ஆம் தேதி 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி பட்டியலின மக்களை அவதூறாகப் பேசிய நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் ஆஜராகாத மீரா மிதுன் "என்னை தாராளமாக கைது செய்யுங்கள். ஏன் காந்திஜி, நேருஜி எல்லாம் ஜெயிலுக்குப் போகவில்லையா. என்னை கைது செய்ய முடியாது. அது கனவில் வேண்டுமானால் நடக்கலாம்'' என்று பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், அவரை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், அவர் கேரளாவில் அவரது உறவினர்கள் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரின் செல்ஃபோன் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்த போலீசார், அங்கு விரைந்தனர்.
மீரா மிதுனை கைது செய்ய காவல்துறையினர் வீட்டினுள் சென்றதும். அவர், தனது செல்ஃபோனில் மீண்டும் ஒரு வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இவங்க எல்லாரும் என்ன டார்ச்சர் பண்றாங்க..முதலமைச்சர் அவர்களே ஒரு பொண்ணுக்கு இப்படித்தான் நடக்கனுமா? எல்லாரையும் வெளிய போக சொல்லுங்க. இவங்க ஒரு கை என் மேல பட்டுச்சுனா நான் இங்கையே என்ன கத்தியால குத்திக்கிட்டு செத்துடுவன். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே, ப்ரைம் மினிஸ்டர் மோடி அவர்களே இந்த தமிழ்நாடு போலீஸ் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாங்க...” என்று கதறி அழுதார். அதன் பிறகு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.