விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வான் சாகச நிகழ்ச்சிகள் மெரினாவில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான இயக்கம் தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும். குறிப்பாக அக்டோபர் 3 ,5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் இடைவெளிகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விமான பயண அட்டவணைகளை சரி பார்த்து பயணிகள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. மெரினாவில் நடத்தப்படும் வான்படை சாகசம் காரணமாக மெரினா பகுதி சிவப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நடைபெறும் வான்படை சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வரும் ஆறாம் தேதி சென்னைக்கு வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் தமிழக முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.பிரதமர் மோடியின் வருகைக்காக பாதுகாப்புகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமரின் சென்னை வருகை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும் காவல்துறை தரப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சாகச நிகழ்ச்சி பாதுகாப்பிற்காக மற்ற மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக போலீசார் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.