பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். அதன்படி, நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டுப் போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இந்த நிலையில் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வேஷ்டி சட்டை அணிந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் யானைக்கு உணவளித்து பிரதமர் மோடி ஆசி பெற்றுக்கொண்டார். ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, ஹெலிஹாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே ஸ்ரீரங்கம் வந்த பிரதமர் மோடியை, ஸ்ரீரங்கம் கோவில் தெருவில் புரோகிதர்கள் இந்தியில் எழுதி வரவேற்றிருந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.