Skip to main content

“கருவறைத் தீண்டாமை ஒழியும் நாள் தொலைவில் இல்லை!” - பாஜக முருகனுக்கு அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்கம் பதிலடி!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

Priest Training Student  answered to L murugan

 

"நான் ஏன் கருவறைக்குள் நுழைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கேட்பது போன்ற அடிமை மனோபாவம், தமிழகத்தில் இல்லவே இல்லை. அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணர்கள் அல்லாத 203 மாணவர்கள் தமிழகம் முழுவதும் கோவில்களின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு, கருவறைத்  தீண்டாமை தமிழகத்தில் முழுமையாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை!” எனச் சிலிர்க்கிறது, தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்.

 

இதற்குக் காரணம் – சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகனிடம் ‘அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணர்கள் அல்லாத 207 மாணவர்கள் அர்ச்சகராக நியமிக்கப்பட, பாரதிய ஜனதா கட்சி போராடுமா? கந்த சஷ்டி கவசத்தினை கருவறையில் பாட,  தமிழ் வழிபாட்டிற்காகப் போராடுவீர்களா?’ என்று கேட்டபோது, “பேராசிரியர் வேலையை நீங்கள் செய்ய முடியுமா? நான் ஏன் கருவறைக்குள் போக வேண்டும்? கடவுள்களை ஆகம விதிகளின்படி வழிபட, பாரதிய ஜனதா கட்சி ஆதரவளிக்கும். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு உச்சநீதிமன்றததில் நிலுவையில் இருக்கிறது” என்று கூறிவிட்டு, இது தொடர்பான கேள்விகளை மேலும் கேட்கவிடாமல், தனியாக விவாதத்திற்கு வாருங்கள் என்று சமாளித்தார்.  

 

இந்நிலையில், தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் - “2006ம் ஆண்டு, அன்றைய  திமுக ஆட்சியின்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில், பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளித்து கோவில்களில் அர்ச்சகராக்குவதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டு, தமிழ்நாட்டில் 6 சிறப்பு பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன. அவற்றில் பயிற்சி முடித்த மாணவர்களாகிய  நாங்கள் அர்ச்சகராகும் தகுதி திறமையோடு இருக்கிறோம்.

 

Priest Training Student  answered to L murugan

 

2006ம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம், இந்த அரசாணையை எதிர்த்து, மற்ற சாதிகளைச் சேர்ந்தவர்கள் கடவுளைத் தொட்டு பூஜை செய்தால் தீட்டாகிவிடும் என பொதுமக்கள் சொல்கிறார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் நேரடியாகத் தொடர்ந்த வழக்கில், அரசாணைக்கு இடைக்காலத் தடையாணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வழக்கில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பிலும்,  அரசாணையை ஆதரித்து வாதாடினோம். இதன் இறுதி தீர்ப்பு டிசம்பர் 16, 2015 அன்று உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

 

இத்தீர்ப்பின் அடிப்படையில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணர்கள் அல்லாத எங்களைப் போன்ற மாணவர்கள், அர்ச்சகர்களாக நியமிக்கப்படத் தடையில்லை; ஏனெனில் எந்தக் கோவில் ஆகமத்திலும், பிராமணர்கள்தான் அர்ச்சகராக இருக்க முடியும் என்றில்லை என சட்ட வல்லுநர்கள், தமிழ் ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர். ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான வகையில், சாதி, பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடு, அர்ச்சகர் நியமனத்தில் காட்டப்படுவதை ஏற்க இயலாது; குறிப்பிட்ட கோவில்களின் ஆகமங்களுக்கு ஏற்ப அர்ச்சகர் நியமிக்கப்படலாம்; அனைத்துக் கோவில்களின் அர்ச்சகர் நியமனங்களுக்கும், பொதுவான ஒர் அரசாணை என்பதுதான் ஏற்புடையதல்ல..’ என்பதுதான், உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாராம்சமாக உள்ளது.

 

தீர்ப்பளித்து  5 ஆண்டுகள் ஓடிவிட்டன. தீர்ப்பிற்குப் பின், அத்திபூத்தது போல் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர் மாரிச்சாமி மட்டும், மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோவில் அர்ச்சகராக 2018ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இன்னமும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்கிறார் பாஜக தலைவர் முருகன். அரசியலமைப்புச் சட்டம் நெறிமுறை, கருவறைத் தீண்டாமை ஒழிப்பு, இவையெதுவும் முருகன் உள்ளிட்ட பாஜக, சங் பரிவாரங்களுக்கு  அவசியமில்லை போலும்.  ‘ஆகமம்' எனும் பெயரில், சாதிய சனாதனத்தினை அடைகாக்கும் கூடுகளாக கருவறைகள் நீடிக்கவே,  இவர்கள் விரும்புகின்றனர்.

 

அவர்கள், எந்த 'இந்துக்களின்' நலனுக்காக இருக்கிறார்கள் என்பதனை இதன்மூலம் தெளிவுபடுத்திவிட்டனர். ‘நான் ஏன் கருவறைக்குள் நுழைய வேண்டும்’  என்பதில் நிலவும் அடிமை மனோபாவம்,  இன்றைய தமிழகத்தின் பெருவாரியான ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களிடம் இல்லை. அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணர்கள் அல்லாத மாணவர்கள்,  தமிழகம் முழுவதும் கோவில்களின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு, கருவறைத் தீண்டாமை தமிழகத்தில் முழுமையாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், அதற்கான போராட்டத்தினை தொடர்கிறோம். அதற்குத் தடையாக வரும் எவற்றையும் கடந்திடுவோம்.” எனச் சூளுரைத்திருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்