தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே இருக்கும் சுருளி அருவி பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த சுருளி அருவியில் குளிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் சுருளி அருவி பகுதியில் தேவர்களும், ரிஷிகளும் வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் இது மிகச்சிறந்த ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது. சுருளி அருவியில் அமைந்துள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பூதநாராயணன் கோவில், ஆதி அண்ணாமலையார் கோவில், சங்கிலி கருப்பசாமி கோவில் கைலாசநாதர் கோவில், போன்ற கோவில்களுக்கும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் அமாவாசை, பவுர்ணமி, தமிழ் புத்தாண்டு போன்ற விசேஷ நாட்களில் பொதுமக்கள் அதிக அளவில் இக்கோவிலுக்கு வருகை தருவதுண்டு. இறந்த தங்கள் முன்னோர்களுக்கும் பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு உகந்த தலமாக இது விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு பூத நாராயணன் கோவிலில் உள்ள உண்டியலை உடைப்பதற்காக அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர். அப்போது கோவிலுக்குள் பூசாரியான சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்த மலையன் (வயது 70), திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (59) ஆகிய இருவரும் கோவிலுக்குள் தூங்கிக்கொண்டிருந்தனர். உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு கோவில் பூசாரிகள் எழுந்து அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர் அருகில் இருந்த இரும்பு கம்பியால் பூசாரி மலையனின் தலையில் பலமாக தாக்கினர்.
இதை பார்த்த மற்றொரு பூசாரி பாலசுப்பிரமணி தடுக்க முயன்றார். அவரையும் கொள்ளையர்கள் கடுமையாக தாக்கினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த மலையன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், உத்தமபாளையம் டி.எஸ்.பி. வீரபாண்டி, கம்பம் இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மலையனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்படி கோவிலுக்குள் புகுந்து பூசாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது!