நடிகரும், தே.மு.தி.க கட்சியின் தலைவருமான கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்து தே.மு.தி.கவின் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே சுதீஷ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், இன்னும் இரண்டு தினங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டால் போதும் எனக் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். அவர் பூரண உடல் நலத்துடன் சிறப்பாக இருக்கிறார். மிகவும் குறைந்த வீரிய வைரஸ் தொற்றுதான் உள்ளது. அதற்கு உடனடியாக சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 100% பாதுகாப்பாக இருக்கிறார்.
வீட்டில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால் அது தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டுவது வழக்கம். இன்று ஸ்டிக்கர் ஒட்ட இல்லத்திற்கு வந்த போது உங்கள் வீட்டுப் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்பட்டதே என்ற கேள்விக்கு,
நாங்கள் அரசின் எல்லா விதிமுறைகளையும் கடைப்பிடிப்போம். ஒட்டக் கூடாது என நாங்கள் யாருமே சொல்லவில்லை. அவர்கள் ஒட்டினார்கள் கீழே விழுந்து விட்டது. அதனால் அதை எடுத்துச் சென்று விட்டோம் எனக் கார்ப்பரேஷன் மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் எப்போதுமே அரசாங்கத்தின் அனைத்து விதிகளையும் மதிக்கக் கூடியவர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும் என்றார்.
இல்லையே வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறதே எனச் செய்தியாளர் ஒருவர் மீண்டும் கேட்க, அருகில் இருந்த எல்.கே.சுதீஷ் இதை நீங்கள் மாநகராட்சி ஊழியர்களிடம் கேளுங்கள் என்றார்.
அதன்பிறகு பேச்சைத் தொடர்ந்த பிரேமலதா,
நாங்கள் எல்லோருமே கரோனா பரிசோதனை செய்து விட்டோம். எங்கள் யாருக்குமே கரோனா இல்லை. எங்களைவிட, அவர் வயதானவர் என்பதால் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. அதுவும் சரி செய்து விட்டார்கள். அடுத்த வாரம் வந்து விடுவார். இன்னும் ஓரிரு நாட்களில் வீடு வந்து விடுவார். அடுத்த வாரத்திலிருந்து அரசியல் பணிகளை அவர் ஆரம்பிக்கப் போகிறார். அடுத்த வாரத்தில் இருந்து ஆன்லைனில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு பேசவிருக்கிறார். தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், தேர்தலுக்கான பணிகள் என அடுத்த கட்டப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.