‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கூற்றைப் பல வருடங்களாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இம்மாதம் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.
இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்களில், இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாகப் பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது என்று கூறி, அசாம் முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரும் பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், கிரிக்கெட், ரயில் போன்ற பலவற்றையும் ஆங்கிலேயர்கள்தான் கொடுத்தார்கள். அதனால் அனைத்தையும் மாற்றிவிடலாமா? என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக், “ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாங்கள் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர் மற்றும் எங்கள் உண்மையான பெயர் 'பாரத்'. அதை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட கால தாமதமாகிவிட்டது. இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிசிசிஐ-யை வலியுறுத்துகிறேன்” எனத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், கார்ட்டூனிஸ்ட் ஒருவர் இந்தியா கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் இந்தியா என்று இருப்பதை அழித்துவிட்டு பாரத் என்று மாற்றுவது போன்று ஒரு கார்ட்டூனை பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ், அந்த கார்ட்டூன் பதிவைக் குறிப்பிட்டு, “உங்களால் பெயர்களை மட்டும் தான் மாற்ற முடியும். இந்தியர்களான நாங்கள் நினைத்தால் உங்களையும் உங்கள் அரசாங்கத்தையும் மாற்ற முடியும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
You can only change names with FEAR .. we INDIANS can change YOU and Your GOVERNMENT... with PRIDE . #INDIA #justasking https://t.co/VlnjNg25vf— Prakash Raj (@prakashraaj) September 6, 2023