ஓட்டு போடவில்லை என்பதற்காக தமிழகத்தை பா.ஜ.க. வஞ்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது " உச்சநீதிமன்றம் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என அறிவித்துள்ளதை, நாங்கள் முழுமனதாக வரவேற்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளோடு மாநகராட்சி முதல் கிராம ஊராட்சிகள் என அனைத்து உள்ளாட்சி பதவிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்கள் கருத்து. அதிமுக, தமாகா கூட்டணியை பொருத்தவரை பலமான கூட்டணி. இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறது.
தெலுங்கானாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். இதனை நாங்கள் வரவேற்கிறோம். அப்போது தான் குற்றவாளிகளுக்கு உயிர் பயம் உருவாகும். தமிழகத்திலும் இதுபோன்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கும் இதேபோல தண்டனை கொடுக்க வேண்டும். குறிப்பாக பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு இதுபோன்ற தண்டனைகளை தர வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் குறையும்.
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனைக்குரியது ஆனால் அந்த சுவருக்கு தீண்டாமை சுவர் என்று பெயர் வைத்து ஒரு சில சமூக இயக்கங்கள் ஒன்று சேர்ந்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறன. தமிழக அரசு இதை கண்காணித்து யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும். தமிழக அரசும் ரேசன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பதால் ஈரோடு, கோவை மாவட்டங்களில் தொழிற்சாலைகள் பெருமளவு மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தமிழகத்தில் பாஜகவிற்கு ஓட்டு போடவில்லை என்பதற்காக தமிழகத்தை பா.ஜ.க.வஞ்சிப்பதையும் தொழிற்சாலைகள் மூடப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று தெரிவித்தார்.