
பிரதமர் தலைமையில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு கூட்டத்திற்கு பிறகு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம். அதேசமயத்தில் தமிழ்நாட்டில் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளது.'
தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பி.டி ஆஷா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்பிரியா சாஹு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை படிப்படியாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அவர் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆசியாவின் மிகப்பெரிய மொத்த பழங்கள் மற்றும் காய்கறி சந்தையான கோயம்பேடு வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தவும் மற்றும் பாரம்பரிய பைகளுக்கு (மஞ்சப்பை) மாற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வியாபாரிகளும், பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும்,பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான முழு பிரச்சாரத்தையும் கண்காணிக்க ஒரு வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விஷுவல் மற்றும் ஆடியோ மீடியாக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டனர். தமிழக முதலமைச்சரும் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரத்திற்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய உள்ளதாக குறிப்பிட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்வதை அகில இந்திய அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து மாநிலங்களும் மத்திய அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் ,பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்தனர். பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பிரதமரால் நடத்தப்பட்ட பிரகதி என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கூட்டத்திற்குப் பிறகு, பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிபதிகள்,பிளாஸ்டிக்கை புழக்கத்தில் இருந்து ஒழிக்கும் முயற்சிக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.