
கரோனா அச்சத்தால் தமிழகத்தில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை சீனியா் மருத்துவா்கள் கவனிப்பதற்கு பதில் மருத்துவப் படிப்பு முடிந்து ஹவுஸ் சா்ஜன் பயிற்சியில் இருக்கும் மருத்துவா்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இதை மருத்துவமனை நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. இதனால் நோயாளிகளுக்கு உயிர் பலி ஆகக்கூடிய சூழ்நிலைக்கூட ஏற்பட்டுள்ளது.
இப்படித் தான் பயிற்சி மருத்துவா் பிரசவம் பார்த்ததால் இளம் பெண் ஓருவா் உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொட்டாரத்தைச் சோ்ந்த சுரேஷ்குமார் சிங்கப்பூரில் தனியார் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது காதல் மனைவி பவித்ரா (24). நிறைமாத கா்ப்பிணியான இவர் கொட்டாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக நேற்று அனுமதிக்கபட்டார்.
அனுமதித்ததில் இருந்து பயிற்சி மருத்துவா் ஒருவரும் நா்ஸ்சும் தான் பரிசோதனை செய்து வந்தனா். இதற்கு அந்தப் பெண்ணின் உறவினா் சீனியா் மருத்துவா் எங்கே என்று கேட்டதற்கு அந்தப் பயிற்சி மருத்துவா் பதில் எதுவும் கூறாமல் உங்களுக்கு குழந்தை நல்லப்படியாக தானே பொறக்கணும் என அதட்டலாகப் பேசியுள்ளார். அந்தப் பயிற்சி மருத்துவா் சொன்னது போல் பெண்குழந்தையும் சுகப்பிரசவமாக தான் பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அந்தப் பெண்ணுக்கு ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது அதைக் கட்டுப்படுத்த அந்தப் பயிற்சி மருத்துவரால் முடியவில்லை. இதனால் அவள் உயிருக்குப் போராடிய சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அந்தப் பெண்ணை இன்னொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். காலதாமதமாகி கொண்டு சென்றதால் அந்த மருத்துவமனையில் இருந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் கொஞ்ச நேரத்திலே அந்தப் பெண் பரிதாபமாக இறந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினா்கள் பயிற்சி நா்ஸின் தவறான சிகிச்சையால் பெண் இறந்து விட்டதாகக் குற்றம் சாட்டி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். இதனால் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.